செய்திகள்

கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

Published On 2018-12-29 12:59 IST   |   Update On 2018-12-29 12:59:00 IST
கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திய மர்ம பெண்ணை தேடி வருகின்றனர். #Girlrescue

ராயபுரம்:

பழைய வண்ணாரப்பேட்டை சின்ன மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி செல்வி. இவர்களது 4 வயது மகள் ஜெயலட்சுமி.

இந்த தம்பதி சவுகார்பேட்டை ஆதியப்பன் தெருவில் தள்ளு வண்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் செல்வி தள்ளு வண்டியில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அங்கு சிறுமி ஜெயலட்சுமி விளையாடிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஜெயலட்சுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி மகளை அப்பகுதியில் பல இடங்களில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி ஜெயலட்சுமியை பெண் ஒருவர் கையை பிடித்து அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அப்பெண் சிறுமியை கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திய மர்ம பெண்ணை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட சிறுமி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்ததும் அவளை ரெயில்வே போலீசார் மீட்டு தி.நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்ததும் தெரிய வந்தது. போலீசார் காப்பகத்துக்கு சென்று சிறுமியை அழைத்து வந்தனர்.

சிறுமியை கடத்திய பெண் செங்குன்றத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அப்பெண்ணை பிடிக்க போலீசார் செங்குன்றத்துக்கு விரைந்துள்ளனர். சிறுமியை கடத்திய அவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீசாரை பார்த்ததும் அங்கேயே விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. #Girlrescue

Tags:    

Similar News