செய்திகள்

திருச்சியில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-12-24 09:59 GMT   |   Update On 2018-12-24 09:59 GMT
புதிய கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

திருச்சி:

தமிழகம் முழுவதும் வருகிற 1-ந்தேதி முதல் கேபிள் டி.வி. கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் இன்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விஷ்ணுவர்த்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜ், பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர் பொது நலச்சங்க மாநில துணை தலைவர் தாமோதரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மணப்பாறை பகுதி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலன் காக்கும் வகையில் மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர் விஷ்ணுவர்த்தன் வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், மணப்பாறை மற்றும் துறையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ள பொதுமக்களே டி.வி. சேனலை தேர்வு செய்து பார்க்கும் முறையினால் ஏற்படும் கட்டண உயர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், சிறந்த பொழுது போக்கு மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையாக விளங்கும் கேபிள் டி.வி.க்கு ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீத மாக குறைக்க வேண்டும், தமிழக அரசு கட்டண சானல்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்கள் தொழிலை புனரமைக்க தலா ரூ.ஒரு லட்சம் இழப்பீடு, முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் தலா ரூ.2லட்சம் கடன் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News