செய்திகள்

தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் விஷால் விடுவிப்பு

Published On 2018-12-20 14:10 GMT   |   Update On 2018-12-20 14:31 GMT
தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்று கைதான விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். #TFPC #ProducersCouncil #Vishal
சென்னை:

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்க தொடங்கினார்கள். பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் பாரபட்சம், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சங்க பொதுக்குழு கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.

ஏ.எல். அழகப்பன், டி.சிவா, எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், நந்தகோபால், மைக்கேல் ராயப்பன், தனஞ்செயன் உள்பட சுமார் 50 பேர் திரண்டனர். அவர்கள் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றதாக நடிகர் விஷால் இன்று காலை கைது செய்யப்பட்டார். அவரையும், அவரது ஆதரவாளர்களையும் தியாகராய நகரில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.

இந்நிலையில், சென்னையில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மாலையில் விடுவிக்கப்பட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடன் கூறுகையில், மிகவும் வேடிக்கையாக உள்ளது. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தேன். தவறு செய்தவர்களின் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தவறு செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையை நான் நம்புகிறேன். நீதிமன்றம் சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். நிச்சயமாக இளையராஜாவுக்கு இசை விழாவை நடத்துவோம்.

சங்கத்தில் கணக்கு கேட்க வேண்டும் என்றால் முறையாக கேட்க வேண்டும், அதற்கென தனி விதி உள்ளது. நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி கொடுக்கப்பட்டு வருகிறது, அதற்கான கணக்கும் உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இல்லாதவர்கள் எங்கள் மீது புகார் கொடுத்துள்ளனர்.

நல்லது செய்வதற்குப் பெயர் முறைகேடு என்றால் அதை செய்வேன், தொடர்ந்து செய்வேன்.  7 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது தவறானது என தெரிவித்தார். #TFPC #ProducersCouncil #Vishal
Tags:    

Similar News