செய்திகள்

கடலூர் தபால் நிலையம் அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-12-20 11:38 GMT   |   Update On 2018-12-20 11:38 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் இன்று காலை கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதல் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித்தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயனுள்ள கணினி மற்றும் இணைய தள வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.

மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகரன், பெரிய தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட போராட்டக்குழு தலைவர் ராமன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மண்டல செயலாளர் ஜெயராமன், கடலூர் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் புஷ்ப காந்தன், மாவட்ட தலைவர் பெரியபிள்ளை, மாநில விவசாய சங்க செயலாளர் குமரகுரு, மாவட்ட அமைப்பு செயலாளர் இந்திரகுமார், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட இணைச்செயலாளர் கண்ணதாசன், மூர்த்தி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இதில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பயணப்படி அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருமாவளவன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் செந்தில்நாதன், மாவட்ட துணைத்தலைவர் அய்யப்பன், மாவட்ட துணை செயலாளர் சங்கர், மாவட்ட இணைச்செயலாளர் சிவலிங்கம், மாவட்ட செய்தி தொடர்பாளர் குமாரசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் கடலூர் மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் கமல்ராஜ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News