செய்திகள்

வடமதுரை ரேசன் கடையில் சேதமடைந்த படிகட்டுகளால் முதியவர்கள் அவதி

Published On 2018-12-14 11:27 GMT   |   Update On 2018-12-14 11:27 GMT
வடமதுரை ரேசன் கடையில் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளதால் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

வடமதுரை:

வடமதுரை ரெயில்நிலைய சாலையில் ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சீனி, பருப்பு, பாமாயில், அரிசி, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மானிய விலையில் பெற்று வருகின்றனர்.

இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். இவர்கள் தமிழக அரசின் இலவச அரிசியை பெரிதும் நம்பியுள்ளனர். எனவே இந்த கடையில் எப்போதும் பயனாளிகள் கூட்டம் அதிகம் இருக்கும்.

இந்த ரேசன் கடையின் வாயிலில் உள்ள படிக்கட்டுகள் உயரமாக உள்ளதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும் ஒரு சில படிக்கட்டுகள் சேத மடைந்துள்ளதால் முதியவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். பெண்களும் அவதியடைந்து வருவதால் சாய்தளம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News