செய்திகள்

பெருங்களத்தூர் அருகே ஏரியில் 5 முதலைகள் - பொதுமக்கள் அச்சம்

Published On 2018-12-14 09:37 GMT   |   Update On 2018-12-14 09:37 GMT
பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் ஏரியில் முதலைகள் நடமாடுவதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தாம்பரம்:

சென்னை பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் ஏரி உள்ளது. நேற்று காலை ஆடு,மாடு மேய்ப்பவர்களும், துணி துவைப்பவர்களும் ஏரிக்கு அருகில் சென்றனர்.

அப்போது ஏரியில் 6 அடி நீளமுள்ள 5 முதலைகள் மிதந்து கொண்டிருந்தன. இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று வனத் துறையினர் ஏரிப்பகுதிக்கு விரைந்து சென்றனர். பைனா குலர் மூலம் ஏரியில் முதலை நடமாட்டத்தை கண்காணித்தனர்.

வெயில் காலம் தொடங்கும் நேரத்தில் தண்ணீர் வற்றுவதால் ஏரியில் முதலை தென்படுகிறது.

வண்டலூர் பூங்காவில் முதலை பண்ணையும் உள்ளது. அங்குள்ள சிறிய முதலை குட்டிகளை தூக்கிச் செல்லும் பறவைகள் அருகில் உள்ள ஏரிகளில் போட்டு விட்டு சென்று விடுகின்றன. அப்படி போடப்படும் முதலைகள் ஏரிகளில் உள்ளன.

இதன் காரணமாக முதலை பண்ணையில் தற்போது முதலை குட்டிகளை பறவைகள் தூக்கி செல்லாத படி வலை கட்டியுள்ளோம். நெடுங்குன்றம் ஏரியில் உள்ள முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நெடுங்குன்றம் ஏரியில் முதலைகள் நடமாடுவதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏரிப்பகுதிக்கு செல்லவும் பொதுமக்கள பயப்படுகிறார்கள்.

பெருங்களத்தூர் சதானந்தபுரம் ஏரியில் 6 மாதங்களுக்கு முன்பு இதே போல் முதலை நடமாட்டம் காணப்பட்டது. ஆனால் அந்த முதலை இதுவரை பிடிபடவில்லை. தற்போது நெடுங்குன்றம் ஏரியிலும் முதலை நடமாட்டம் காணப்படுகிறது.

Tags:    

Similar News