செய்திகள்

இரணியல் அருகே தொழில் அதிபர் திடீர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-12-13 13:23 GMT   |   Update On 2018-12-13 13:23 GMT
இரணியல் அருகே தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமையா? இருக்குமோ என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரணியல்:

இரணியல் அருகே கண்டன் விளை வலியவீடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெப்ரின் ஜோஸ் (வயது 34).

இவருக்கு பேபி லிசா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். தொழில் அதிபரான ஜெப்ரின் ஜோஸ் அந்த பகுதியில் ஹாலோபிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற் சாலை நடத்தி வந்தார்.

நேற்று காலை அவர், வழக்கம்போல வீட்டில் இருந்து புறப்பட்டு தனது தொழிற்சாலைக்கு சென்றார்.

அந்த தொழிற்சாலையில் உள்ள தனது அறைக்கு சென்று பணிகளை ஜெப்ரின் ஜோஸ் கவனித்து வந்தார். பகல் நேரத்தில் அவரது அறைக்கு சென்ற ஊழியர்கள் ஜெப்ரின் ஜோஸ் வி‌ஷம் குடித்த நிலையில் அறையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ஊழியர்களும், உறவினர்களும் சேர்ந்து அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜெப்ரின் ஜோஸ் இறந்து விட்டார்.

இதுபற்றி அவரது மனைவி பேபி லிசா இரணியல் போலீசில் புகார் செய்தார். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போலீசார் விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஜெப்ரின் ஜோஸ் கடன் வாங்கியிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மனவேதனையில் அவர், தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. கந்து வட்டி கொடுமை காரணமாக தொழில் அதிபர் ஜெப்ரின் ஜோஸ் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுபற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News