செய்திகள்

தேசிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை - தினகரன்

Published On 2018-12-11 04:45 GMT   |   Update On 2018-12-11 04:45 GMT
பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று டி.டி.வி. தினகரன் பேட்டியில் கூறியுள்ளார். #Parliament #Dhinakaran

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துடன் அ.தி.மு.க.வை இணைப்பது குறித்து எங்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெளிவான கருத்துக்களையே கூறி வருகிறார். அ.தி.மு.க.வில் உள்ள குறிப்பிட்ட 12 பேர் தவிர மற்ற அனைவரும் விரும்பினால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் வந்து சேரலாம்.

தனிப்பட்ட முறையில் நாங்கள் யாரையும் வந்து சேருங்கள் என்று அழைக்கவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்களுடன் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அ.தி.மு.க-அ.ம.மு.க இருகட்சிகளும் இணைய வேண்டும் என்று பா.ஜ.க. கூறியதாக நான் நாளிதழ்களில் தான் படித்தேன். இது தொடர்பாக யாருமே என்னிடம் பேசவில்லை. எந்த தேசிய கட்சியும் தூதர் அனுப்பி என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தவில்லை.


பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக நான் ராகுல்காந்தியை சந்திக்க முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் எந்த உண்மையும் இல்லை. எந்த தேசிய கட்சியுடனும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

தமிழ்நாட்டில் 4 மாநில கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி பற்றி பேசு உள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அந்த கூட்டணி முழுவடிவம் பெறும். அந்த 4 கட்சிகள் பற்றி இப்போது நான் எதுவும் சொல்ல இயலாது.

மத்திய அரசு என்னை அரசியலில் இருந்து அகற்றி ஒழித்து விடலாம் என்று முயற்சி செய்கிறது. அதை எதிர்த்து போராடி நான் வெற்றி பெறுவேன்.

எங்களுக்கு பொது எதிரி தி.மு.க. தான். எனவே தி.மு.க. அங்கம் வகிக்கும் எந்த கூட்டணியிலும் நாங்கள் இடம்பெற மாட்டோம்.

ரஜினியும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் எங்களுக்கு 40 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை ஆதரவு உள்ளது.

இவ்வாறு டி.டி.வி தினகரன் கூறினார். #Parliament #Dhinakaran

Tags:    

Similar News