செய்திகள்

நெல்லை காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 5 சிறுவர்கள் மீட்பு

Published On 2018-12-10 07:12 GMT   |   Update On 2018-12-10 07:12 GMT
நெல்லை காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 5 சிறுவர்களை மீட்ட போலீசார் மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை சந்திப்பு பால பாக்யாநகர் பகுதியில் ‘சரணாலயம்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள் இங்கு தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர்.

இங்கு ‘சைல்டு லைன்’ மூலம் மீட்கப்படும் குழந்தைகள், தாய்-தந்தையின்றியும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் தனித்து விடப்பட்ட குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் உள்ள‌னர். மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலம் இவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த காப்பகத்தில் இருந்த 7 சிறுவர்கள் அங்குள்ள ஜன்னலை உடைத்து வெளியேறி சுவர் ஏறி குதித்து தப்பி சென்று விட்டனர். காப்பகத்தில் இருந்து தப்பியோடிய 7 சிறுவர்களும் கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருபவர்கள் ஆவர்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் காப்பகத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுவர்கள் தப்பி ஓடியது குறித்து வழக்குப்பதிந்து அவர்களை தேடி வந்தனர்.

தப்பி ஓடிய சிறுவர்கள் நெல்லைபேட்டை, சுத்த மல்லி, சென்னை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். ஆகவே அவர்கள் தப்பி ஓடி தங்களது வீடுகளுக்கு சென்றிருக்கலாம் என போலீசார் கருதி அந்தந்த சிறுவர்களின் ஊர்களில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் காப்பகத்தில் இருந்து ஓடிய 5 சிறுவர்கள் போலீசாரிடம் இன்று சிக்கினர். பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இருந்த அவர்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து 5 சிறுவர்களும் மீட்கப்பட்டு சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தப்பி ஓடியவர்களில் சென்னை, பேட்டை பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் மட்டும் சிக்கவில்லை. அவர்களையும் போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News