செய்திகள்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

Published On 2018-12-09 19:13 GMT   |   Update On 2018-12-09 19:13 GMT
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளது. இது தமிழகத்தை நோக்கி புயலாக மாறுமா? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தகவல் தெரிவித்தார். #NortheastMonsoon #Rain
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் கடந்த மாதம் உருவான ‘கஜா’ புயலால், டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்தன. தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி உள்ளது.

இது வலுப்பெற்று வருகிற 12-ந்தேதி புயலாக மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் 13-ந்தேதி தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை நோக்கி நகரும் என்றும், 16-ந்தேதி மதியம் சென்னைக்கும்-விசாகப்பட்டினத்துக்கும் இடையே நெல்லூரில் புயல் கரையை கடக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

இவ்வாறு புதிய புயல் உருவாக்கும் பட்சத்தில் அந்த புயலுக்கு தாய்லாந்து நாடு ‘பெய்ட்டி’ என்று பெயர் சூட்டி இருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.பாலச்சந்திரனிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-



இந்திய பெருங்கடலை ஓட்டி உள்ள தென்கிழக்கு வங்கக் கடல் மத்திய பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மதியம் 5.30 மணி நிலவரப்படி(நேற்று) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் (12-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே, அது புயலாக மாறுமா? என்பது தான் தெரிய வரும். தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் பட்சத்தில் 12-ந்தேதி முதல் சென்னை உள்பட வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. #NortheastMonsoon #Rain
Tags:    

Similar News