செய்திகள்

ஆதம்பாக்கம் பெண்கள் விடுதி உரிமையாளரின் தில்லுமுல்லு - குண்டு பல்புகளிலும் நவீன கேமரா

Published On 2018-12-05 05:47 GMT   |   Update On 2018-12-05 05:47 GMT
சென்னை ஆதம்பாக்கம் விடுதியில் தங்கியிருந்த பெண்களை ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் பிடித்த உரிமையாளரின் பல்வேறு தில்லுமுல்லுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. #AdambakkamHostel
ஆலந்தூர்:

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் 1-வது தெருவில் பெண்கள் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இந்த தங்கும் விடுதியை குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் சம்பத் ராஜ் என்கிற சஞ்சீவி (வயது 48) என்பவர் நடத்தி வந்தார். பி.இ. பட்டதாரியான அவர் கட்டுமான நிறுவனமும் நடத்தி வந்தார்.

இந்த தங்கும் விடுதியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியை உள்பட 7 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் தலா ரூ.7 ஆயிரம் வாடகை கொடுத்தனர். பேராசிரியை புதுச்சேரியை சேர்ந்தவர் ஆவார். மற்றவர்கள் மதுரை, புதுக்கோட்டை, கர்நாடகா, கொல்கத்தா ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

நேற்று முன்தினம் பேராசிரியை குளித்து விட்டு தலைமுடியை காய வைப்பதற்காக ஹேர்டிரையரை பயன்படுத்த அங்குள்ள மின்சார பிளக்கில் சொருகினார். ஆனால் பிளக்கில் அது நுழையவில்லை. எனவே அவர் பிளக்கை கழற்றி பார்த்தார். அப்போது அதனுள் சிறிய கேமரா இருந்தது. கேமராவே பிளக்காக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் புதுச்சேரியில் உள்ள தனது உறவினரான போலீஸ் அதிகாரிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அவர் இதுபற்றி பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் கூறினார்.

இதையடுத்து தென் சென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமி மேற்பார்வையில் ஆதம்பாக்கம் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, ராஜு, போலீஸ் ஏட்டுகள் பாலகிருஷ்ணன், ரகு, அந்தோணி ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


மொத்தம் 9 ரகசிய வயர்லெஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 3 குளியல் அறை, படுக்கை அறை விளக்கு, ஹாலில் உள்ள கடிகாரங்கள், ஹேங்கர், பூ ஜாடி, கண்ணாடி ஆகிய இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த கேமராக்கள் மூலம் சம்பத்ராஜ் பெண்களை ரகசியமாக படம் பிடித்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பத் ராஜை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினார்கள். விடுதியில் தங்கி இருந்த பெண்களிடம் விசாரித்தபோது சம்பத் ராஜின் வீட்டு முகவரி தெரியவில்லை. அவர் தாம்பரம், விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருவதாக முதலில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று விசாரித்தபோது அவரது வீடு அங்கு இல்லை என்று தெரியவந்தது.

பின்னர் விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் யார் மூலம் விடுதியில் சேர்ந்தீர்கள் என்று போலீசார் விசாரித்தனர். அப்போது இணையதளம் மற்றும் பேஸ்புக்கில் முகவரி பார்த்து விடுதியில் வந்து தங்கியதாக தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பத்ராஜின் முகவரியை போலீசார் தேடினார்கள். அப்போது அவர் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பஜனை கோவில் 3-வது தெருவில் வசித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்று தொழில் அதிபர் சம்பத்ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்கள் தங்கும் விடுதி நடத்தினேன். கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தேன். அட்வான்சாக ரூ.50 ஆயிரமும், வாடகையாக மாதம் ரூ.24 ஆயிரமும் கொடுத்தேன். இது 2100 சதுரஅடியில் 3 படுக்கை அறை கொண்ட வீடு ஆகும். இங்கு 7 பேர் தங்கி இருந்தனர்.

எனது மனைவி சித்தா மருத்துவர். அவர் சித்தா மருத்துவம் பார்ப்பதற்காக படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அந்த வீட்டில் போட்டிருந்தேன். ஹாலில் உள்ள ஒரு பகுதியை சித்தா மருத்துவத்துக்கான அலுவலகமாக பயன்படுத்த முடிவு செய்திருந்தேன். அங்கு தங்கியிருந்த 7 பெண்களும் பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள் என்பதால் பகலில் ஹாலை சித்தா மருத்துவத்துக்கு பயன்படுத்த அனுமதித்தனர்.

எனவே பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்றபிறகு அங்கு வந்து விடுவேன். இதனால் கேமரா பொருத்துவது எனக்கு வசதியாக போய்விட்டது.

வீட்டை வாடகைக்கு எடுத்தபோதே என்ஜினீயர் வேலை முடிந்ததும் கேமராக்களை நானே ரகசியமாக பொருத்தினேன். இந்த கேமராக்களை ஆன்லைன் இணையதளத்தில் வாங்கினேன். ஒவ்வொரு கேமராவும் ரூ.2,500 ஆகும்.

இவை அனைத்துமே உளவுத்துறையினர் பயன்படுத்தும் ரகசிய கேமரா ஆகும். பட்டன் வடிவில், ஹேங்கர் வடிவில் இந்த கேமராக்கள் இருந்தன. இந்த கேமராக்களில் மெமரி கார்டையும் பொருத்தி இருந்தேன்.

இந்த கேமரா ஆட்கள் நடமாடும் சத்தம் இருந்தால் மட்டுமே பதிவு செய்யும் கேமரா ஆகும். மற்ற நேரங்களில் இயங்காது. இந்த கேமராக்கள் மூலம் மெமரி கார்டில் பதிவான படங்களைத்தான் பார்க்க முடியும் என்பதால் தற்போது நவீன தொழில் நுட்பத்துடன் வைபை மூலம் இயங்க கூடிய 3 குண்டு பல்புகளுடன் கூடிய கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன். இந்த கேமராக்களை பொருத்தினால் மெமரி கார்டை கழற்ற தேவையில்லை. வைபை மூலமே ஆபாச காட்சிகளை பார்க்கலாம் என்பதால் அதை பொருத்த முடிவு செய்திருந்தேன். ஆனால் அதற்குள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சம்பத்ராஜ் இதற்கு முன்பு தேனாம்பேட்டையில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டபோது தனது நிறுவனத்தில் வேலை செய்த பெண்களை ஆபாச படம் எடுத்து வைத்திருந்தார். அந்த சி.டி.யை போலீசார் கைப்பற்றினார்கள். கட்டுமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததால் அவர் பெண்கள் விடுதியை நடத்தினார்.

மேலும் சம்பத்ராஜ் மீது வளசரவாக்கம், விருகம்பாக்கம், பெங்களூர் போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகளும் பதிவாகி உள்ளன. #AdambakkamHostel 
Tags:    

Similar News