செய்திகள்

நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2018-12-02 18:23 GMT   |   Update On 2018-12-02 18:23 GMT
நாமக்கல்லில் நேற்று உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை வழியாக மீண்டும் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையை வந்தடைந்தது.

முன்னதாக எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியான “எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன். அறிந்ததை என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன். எச்.ஐ.வி. இல்லாத சமுதாயத்தை உருவாக்கிடுவேன்” என்ற உறுதி மொழியினை கலெக்டர் வாசிக்க அனைவரும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

இதில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் (பொறுப்பு) திருநாவுக்கரசு, காசநோய் திட்ட துணை இயக்குனர் கணபதி, உதவி இயக்குனர் (சுகாதாரம்) நக்கீரன், நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார் உள்பட கல்லூரி மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News