செய்திகள்

தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பு

Published On 2018-12-01 08:12 GMT   |   Update On 2018-12-01 08:12 GMT
தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. #AIDS #TN
சென்னை:

சர்வதேச எய்ட்ஸ் நோய் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டது.

அதில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. அதுவும் புதிதாக இளைஞர்களை பெருமளவில் பாதித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் 20 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் 432 பேரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. 2017-2018-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் நடப்பு ஆண்டில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே 318 பேரை எய்ட்ஸ் நோய் பாதித்துள்ளது.

2015 முதல் 2016-ம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 435 பேரை எய்ட்ஸ் நோய் தாக்கியிருந்தது. அது 2017-2018-ம் ஆண்டில் 536 ஆக அதிகரித்தது. தற்போது ஏப்ரல் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் புதிதாக 435 எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகியுள்ளனர்.

10 முதல் 19 வயது வரையிலான சிறுவர்களையும் எய்ட்ஸ் நோய் விட்டு வைக்கவில்லை. 2015-2016-ம் ஆண்டில் 160 பேரையும், 2017-2018-ம் ஆண்டில் 187 பேரையும் தாக்கியது. தற்போது ஏப்ரல்-அக்டோபர் மாதங்களுக்கு இடையே மேலும் 99 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



பாதுகாப்பற்ற முறையில் ‘செக்ஸ்’ மற்றும் ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்துவது போன்ற காரணங்களால் 10 வயது சிறுவர்கள் முதல் 25 வயது இளைஞர்கள் வரை எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் 1,12,778 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்களில் சென்னையில் தான் அதிக அளவில் இருக்கின்றனர் என பொது சுகாதார துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எய்ட்ஸ் நோயை தடுக்க சமூக வலை தளங்கள், உள்ளிட்ட பல ஊடகங்களை பயன்படுத்தலாம். அதன் மூலம் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #AIDS #TN

Tags:    

Similar News