செய்திகள்

சாலிகிராமத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டரை கடத்த முயற்சி- கத்தியுடன் வாலிபர் கைது

Published On 2018-12-01 06:24 GMT   |   Update On 2018-12-01 06:24 GMT
சாலிகிராமத்தில் நேற்று இரவு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டரை கடத்த முயன்ற 3 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் சிக்கினார். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

போரூர்:

வளசரவாக்கம் சேனாதிபதி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். குழந்தைகள் நல மருத்துவர். சாலிகிராமம் ஸ்டேட் பாங்க் காலனி 2-வது தெருவில் மருத்துவ மனையை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு 10 மணி அளவில் கார்த்திகேயன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.

அப்போது 3 பேர் கொண்ட கும்பல் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கத்தி முனையில் டாக்டர் கார்த்திகேயனை கடத்த முயன்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 3 பேர் கும்பலை பிடிக்க முயன்றனர்.

இதில் ஒருவன் மட்டும் சிக்கினான். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரை விருகம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்த்தைச் சேர்ந்த லோக பிராமன் (21) என்பது தெரியவந்தது.

விசாரணையில் டாக்டர் கார்த்திகேயனிடம் கடந்த சில மாதங்களாக பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்ததும், ஆனால் அப்பெண்ணின் குழந்தை இறந்து விட்டதும் அதன் காரணமாக டாக்டரை கடத்தி செல்ல வந்ததாகவும் கூறினார். அவனிடமிருந்து இரண்டு கத்தி மற்றும் கயிறு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

லோக பிராமனின் கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த சத்யா மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டாக்டரை கடத்த வந்த மூவரும் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் பணம் பிரச்சனை காரணமாக டாக்டரை கடத்த வந்தார்களா என்கிற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News