செய்திகள்

கடன் தொல்லையால் பாப்ஸ்கோ ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-11-30 12:17 GMT   |   Update On 2018-11-30 12:17 GMT
கடன் தொல்லையாலும், மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாத ஏக்கத்திலும் பாப்ஸ்கோ ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் புதுநகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). பாப்ஸ்கோ ஊழியர்.

இவருக்கு காமாட்சியம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில் இளைய மகளும் திருமண வயதில் உள்ளார்.

இந்த நிலையில் 2 மகள்களுக்கு கடன் வாங்கி திருமணம் செய்து வைத்திருந்த நிலையில் சம்பளம் வழங்கப்படாததால் ராமச்சந்திரன் அந்த கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வந்தார்.

அதோடு இளைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமே என்ற கவலையில் இருந்து வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு ராமச்சந்திரனை வலியுறுத்தி வந்ததால் விரக்தியில் இருந்து வந்தார்.

இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குபோட்டு தொங்கினார்.

அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திரனை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பளம் வழங்கப்படாததாலும், கடன் தொல்லையாலும் வில்லியனூர் வசந்தம் நகரை சேர்ந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியர் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதேபோன்று சம்பளம் வழங்கப்படாததால் கடன் தொல்லையில் பாப்ஸ்கோ ஊழியர் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வில்லியனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News