செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2018-11-29 09:45 GMT   |   Update On 2018-11-29 09:45 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவாக சராசரிக்கும் கீழேயே மழை பெய்யும். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் சூழல் உள்ளது. கஜா புயலின் போது தொடர்ந்து மழை பெய்ததால் திண்டுக்கல் நகர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து புயல் சின்னங்கள் உருவானதால் அவ்வப்போது மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலை 10 மணி வரையும் மாலை நேரத்தில் 3 மணிக்கே பனி சூழ்ந்து காணப்பட்டது.

நேற்று இரவு முதல் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சாரல் மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

இதே போல் பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நத்தம், அய்யலூர், வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், அவதியடைந்தனர்.

குடைகளை பிடித்தவாறும், மழையில் நனைந்தபடியும் சாலையில் சென்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர். இருந்த போதும் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமடைந்துள்ளன. மேலும் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஆத்தூர், காமராசர் அணை உள்பட பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிகமாக தீர்வு காணப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News