செய்திகள்

ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை பகுதியில் நிவாரண பணிகளை விரைந்து செய்யகோரி கிராமமக்கள் சாலை மறியல்

Published On 2018-11-28 10:37 GMT   |   Update On 2018-11-28 10:37 GMT
ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
தஞ்சாவூர்:

டெல்டா மாவட்டங்களில் கஜாபுயல் தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கி 13 நாட்களை கடந்தும் மக்கள் மின்சார வசதி இன்றி தவிக்கின்றனர். பல கிராமங்களில் சாலைகளில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால் வாகன போக்குவரத்து நடைபெறவில்லை. எனவே பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வாகன போக்குவரத்துள்ள இடங்களுக்கு சென்று நிவாரண பொருட்களை பெற்று செல்கின்றனர். தற்போது வீசிவரும் குளிர் காற்று மற்றும் பனியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புயல் தாக்கி பல நாட்களாகியும் தங்களது பகுதிக்கு அதிகாரிகள் வந்து சேதங்களை கணக்கெடுக்காததாலும், உணவு, குடிநீர் வசதி செய்யாததாலும் தினமும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் வழியில் விழுந்து கிடக்கின்றன. ஆனால் நிவாரண பணிகளை மேற்கொள்ள போதிய நடவடிக்கை எடுக்கபடவில்லை.

இதனை கண்டித்து ஒரத்தநாட்டை அடுத்த தெக்கூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே போல் ஒரத்தநாடு அருகே உள்ள செம்மண் கோட்டை கிராமத்திலும் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் மீட்பு பணிகள் நடைபெறதாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசார் மீட்பு பணி நடைபெற ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதே போல பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை, வடசேரி ரோடு, பொன்னவராயன் கோட்டை ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு மின் இணைப்பு வழங்க வேண்டும். குடிநீர் வசதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகை வெளிப்பாளையம் பச்சை பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தாசில்தார் இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரண பொருட்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #Gajacyclone
Tags:    

Similar News