செய்திகள்

சிறுமலையில் சாலை வசதி கோரி கிராம மக்கள் மறியல்

Published On 2018-11-23 10:56 GMT   |   Update On 2018-11-23 10:56 GMT
சிறுமலையில் சாலை வசதி கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள சிறுமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் மலை கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவ-மாணவிகளும் ஏராளமானோர் வந்து செல்லும் இந்த சாலையில் தென்மலை, தாழைக்கடை, வேளாண்பண்ணை ஆகிய பகுதிகளுக்குட்பட்ட சாலை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வருகிறது.

இந்த சாலை 3 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தரமற்ற முறையில் இருந்ததால் ஒரே மாதத்தில் சாலை பெயர்ந்து கற்கள் தெரிய ஆரம்பித்தன. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது கஜாபுயலின் தாக்கத்தினால் இந்த சாலை மேலும் உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் குண்டும் குழியுமாக உள்ளது.

ஆனால் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மலைச் சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் ராஜேஸ்வரி, வனத்துறை ரேஞ்சர் மனோஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், வி.ஏ.ஓ. பிரதாப், ஊராட்சி செயலர் முத்துக்குமார் உள்பட அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்காலிகமாக மண் சாலை அமைத்து விரைவில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News