செய்திகள்

கஜா புயல் பாதிப்பை தி.மு.க. அரசியலாக்கவில்லை - துரைமுருகன் பேட்டி

Published On 2018-11-23 05:11 GMT   |   Update On 2018-11-23 05:11 GMT
கஜா புயல் பாதிப்பை தி.மு.க. அரசியலாக்கவில்லை என துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Gajastorm #Storm #DuraiMurugan

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு எதிர்கட்சி துணை தலைவரும், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான துரைமுருகன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பயிர், கால்நடைகள், வீடுகள் சேதத்தால் மக்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதை சரிசெய்ய எவ்வளவு நிதி தேவைப்படும், மக்களுக்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றை எல்லாம் அமைத்து தர எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை கணக்கீடு செய்வது என்பது சாதாரணமான வேலையில்லை.


அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் கணக்கீடு செய்தார்கள் என்று கூறுகிறார்கள். ஒட்டுமொத்த கணக்கீடு குறித்து தலைமை செயலாளரோ, வருவாய்த்துறை செயலாளரோ சேத மதிப்பு குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இவைகளை எல்லாம் கணக்கீடு செய்யாமல் ஒப்புக்கு சப்பானியாக தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளது.

மத்திய அரசு கணக்கீடு இல்லாமல் நிதி அளிக்காது. ஏற்கனவே வீசிய தானே புயலுக்கே இன்னும் நிவாரணம் வரவில்லை. தற்போது வீசிய புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதி மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். தமிழகத்தை பிரதமரோ, மத்திய உள்துறை மந்திரியோ, நிதி மந்திரியோ எட்டிக்கூட பார்க்கவில்லை. மத்திய அரசுக்கு தமிழகம் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை.

நிவாரண நிதி கேட்பதை தமிழக அரசு தைரியமாக கேட்க வேண்டும். கஜா புயலை தி.மு.க. அரசியலாக்கவில்லை. பாதிப்பு இடங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் முதலில் சென்று பார்வையிட்டார். ஆனால் முதல்-அமைச்சர் ஹெலிகாப்டரில் பறந்து விட்டு வந்துவிட்டார். அவர் கீழே இறங்கி நடந்து சென்று பார்த்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #Storm #DuraiMurugan

Tags:    

Similar News