செய்திகள்

மருத்துவக்கல்லூரி முதல்வரை கண்டித்து செவிலியர்கள் திடீர் போராட்டம்

Published On 2018-11-22 18:24 GMT   |   Update On 2018-11-22 18:24 GMT
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வரை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் திடீரென பணிகளை புறக்கணித்து விட்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை:

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டுகளிலும் செவிலியர்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கேபின்களை அகற்ற மருத்துவ கல்லூரி முதல்வர் உத்தரவிட்டாராம். இதற்கு செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் மருத்துவமனையில் செவிலியர்களுக்கு கழிவறை கூட ஒதுக்கி தராமல் தரக்குறைவாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களும் திடீரென தங்களது காலை பணியை புறக்கணித்து விட்டு மருத்துவமனையின் வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவிலியர்களின் இந்த திடீர் போராட்டத்தினால் அவசர சிகிச்சை பிரிவு, டெங்கு காய்ச்சல் பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா சமதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து செவிலியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்பினர். செவிலியர்களின் இந்த திடீர் போராட்டத்தினால் சுமார் 3 மணி நேரம் நோயாளிகள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகினர்.
Tags:    

Similar News