செய்திகள்

எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க தடை விதித்தது ஐகோர்ட்

Published On 2018-11-19 10:35 GMT   |   Update On 2018-11-19 10:35 GMT
சென்னை மெரினா சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறப்பதற்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MGRCentenaryArch #MadrasHC
சென்னை:

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அரசு சார்பில் ரூ.2.52 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டு வருகிறது. பாதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதனை எதிர்த்து வழக்கறிஞர் தினேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

அவர் தனது மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மெரினா சாலையில் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, எம்ஜிஆர் வளைவை திறக்கக்கூடாது என கூறியிருந்தார். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் வளைவு அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சேஷசாயி, சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

‘எம்ஜிஆர் வளைவு கட்டப்படும் இடம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் இதை ஆக்கிரமிப்பாகவே கருத வேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு மக்களின் வரிப்பணம் ஏன் வீணடிக்கப்படுகிறது? 40 ஆண்டுகளாக ஆட்சியமைத்தவர்களால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு செலவிடுவதைவிட, வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தை அரசு செலவிடலாம். எம்ஜிஆர் வளைவு கட்டுமான பணிகளை முடிக்கலாம். ஆனால் வழக்கு விசாரணை முடியும் வரை திறக்கக்கூடாது’ என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். #MGRCentenaryArch #MadrasHC
Tags:    

Similar News