செய்திகள்

புயல் சேதம் குறித்த இடைக்கால அறிக்கை மத்திய அரசிடம் இன்று தாக்கல்- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

Published On 2018-11-19 07:03 GMT   |   Update On 2018-11-19 07:33 GMT
கஜா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்த இடைக்கால அறிக்கை இன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். #GajaCyclone
புதுச்சேரி:

புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலுக்கு புதுவை அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புதுவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிறிய பாதிப்புகளும் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டது. காரைக்காலில் கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஒருவர் மட்டும் காயமடைந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுமார் 250-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சூறாவளி காற்றால் சேதமடைந்துள்ளது. மின் கம்பங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அமைச்சர் கமலகண்ணன் காரைக்காலில் முகாமிட்டு அதிகாரிகளை முடுக்கி விட்டு பணிகளை செய்து வருகிறார். குடிநீர் கிடைக்காத இடங்களில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வழங்கி வருகிறோம்.

இதுவரை 80 சதவீத சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. காரைக்கால் சேத மதிப்பை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த அறிக்கை மத்திய அரசுக்கு இன்று அனுப்பப்படும்.

காரைக்கால் மாவட்டத்தில் புயலால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.



மீனவர்கள் கடந்த சில நாட்களாக புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் வேலை இழந்துள்ளனர். காரைக்காலில் சேதமடைந்த படகு, வலை ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

புதுவை, காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்லாத காலத்திற்கு நிவாரணம் வழங்கவும் அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம். மத்திய அரசிடம் இருந்து இடைக்கால நிவாரணமும் கோரியுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். #GajaCyclone #MinisterNamasivayam
Tags:    

Similar News