செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2018-11-18 17:59 GMT   |   Update On 2018-11-18 17:59 GMT
சிவகங்கையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை:

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதனை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உடலியக்க குறைபாடு உடையவர்கள், காது கேளாதவர்கள், பார்வையற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகிய பிரிவுகளில் 21 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதன் மூலம் அவர்களின் மனநிலை பக்குவப்படுவதுடன், தேசிய அளவில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு கலந்து கொண்டு வெற்றி பெற, இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் உதவியாக இருக்கும். மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை மறந்து திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.

தற்போதைய போட்டிகளில் மாவட்டத்தில் 15 சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்று வருவோர், இதர பள்ளிகளில் பயில்பவர்கள், பொதுமக்கள் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகள் என 266 மாற்றுத்திறனாளிகளும், 75 சிறப்பு ஆசிரியப் பணியாளர்களும் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் இது போன்ற போட்டிகளில் அதிக அளவில் கலந்து கொண்டு, தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்பு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஏந்தி வந்த ஒலிம்பிக் ஜோதியை கலெக்டர் ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News