செய்திகள்

கிராமிய கலைஞர்களுக்கு அடையாள அட்டை- பெரம்பலூர் கலெக்டரிடம் மனு

Published On 2018-11-13 13:58 GMT   |   Update On 2018-11-13 13:58 GMT
கிராமபுற அனைத்து கிராமிய கலைஞர்களுக்கும், அடையாள அட்டை, நல வாரிய அட்டை அரசு வழங்க வேண்டும் என பெரம்பலூர் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் கிராமத்தில் வசிக்கும் பெண்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், அரும்பாவூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மிகவும் ஏழை, எளிய மக்களாகிய நாங்கள் குடிசை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் எங்களுக்கு அரும்பாவூரில் இருந்து பூலாம்பாடிக்கு செல்லும் வழியில் உள்ள நிலத்தில் இடம் வழங்க வேண்டும் அல்லது அரும்பாவூரில் ஏதேனும் ஒரு நிலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றிய தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நிர்வாகி பொன்னுச்சாமி தலைமையில், அதன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கொடுத்த மனுவில், கிராமபுற அனைத்து கிராமிய கலைஞர்களுக்கும், அடையாள அட்டை, நல வாரிய அட்டை அரசு வழங்க வேண்டும். கிராமிய கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஓய்வூதியம் குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பறை இசை, தப்பாட்டம், நாடகக்குழு, கோலாட்டம், சிலம்பாட்டம் போன்றவைகளுக்கு சினிமா கலைஞர்களுக்கு வழங்கும் விருதுகளை போன்று கிராமிய கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும்.

வேப்பூர் ஒன்றியத்தில் கிராமிய கலைஞர்களின் மரபு சார்ந்த கலைகளை வளர்க்கவும், ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடவும், அரசின் நல திட்ட உதவிகளை பெறவும், அவர்கள் ஒன்று கூடி அலுவலகம் கட்ட குன்னத்தில் இடம் தந்து உதவ வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் மக்கள் நல போராட்டக்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்த மனுவில், வி.களத்தூர் கிராமத்தில் இரு மதத்தினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தனர். #tamilnews
Tags:    

Similar News