செய்திகள்

திருப்பூரில் தீபாவளி துணி தைத்து தரமுடியாத விரக்தியில் பெண் டெய்லர் தற்கொலை

Published On 2018-11-07 16:27 GMT   |   Update On 2018-11-07 16:27 GMT
திருப்பூர் அருகே தீபாவளி பண்டிகைக்கு துணிகள் தைத்து தரமுடியாத விரக்தியில் பெண் டெய்லர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் பாப்பண்ணா நகரில் கடந்த 5 ஆண்டுகளாக பெண்கள் தையல் நிலையம் நடத்தி வருபவர் பத்மினி (வயது 41). திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த இவர் தனது கணவரை பிரிந்து தனது தாய் அம்பிகா, மகள் தமிழரசி மற்றும் மகன் லிபின்சாகர் ஆகியோருடன் திருப்பூரில் தங்கி சொந்தமாக பெண்கள் தையல் நிலையமும் நடத்தி வருகிறார்.

இவர் தைத்து தரும் துணிகள் நன்றாக இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பலர் இவரிடம் தங்கள் துணிகளை கொடுத்து தைத்து வந்துள்ளனர். இதனால் நம்பிக்கையானவர் என்ற பெயரையும் பத்மினி அந்த பகுதியில் பெற்றிருந்தார். இந்த நற்பெயரின் காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு துணிகள் தைத்து தர ஏராளமானோர் நாடியுள்ளனர். ஒரு கட்டத்தில் அதிக துணிகள் வரவே தன்னால் தைத்து தரமுடியாது எனவும் பத்மினி தெரிவித்துள்ளார். எனினும் வாடிக்கையாளர்கள் உங்களால் முடியும் தைத்து தாருங்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த 4 நாட்களாக இரவு பகலாக தைத்து வந்துள்ளார் எனினும் இறுதியாக சில துணிகளை தைத்து தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நற்பெயர் பெற்று வந்த நிலையில் தைத்து தருவதாக வாங்கிய துணிகளை தைத்து தரமுடியாததால் நற்பெயர் கெட்டு விடும் என மனமுடைந்து சாணிபவுடரை கரைத்து குடித்து பத்மினி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் பத்மினியின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News