செய்திகள்

ரூ.300 லஞ்சம் - அரசு டாக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்

Published On 2018-10-31 15:38 GMT   |   Update On 2018-10-31 15:38 GMT
ரூ.300 லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு டாக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 2005-ம் ஆண்டு டாக்டராக வேலை பார்த்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜன். இவரது மனைவி நல்லம்மாள். 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தெருவில் தண்ணீர் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் நல்லம்மாள் தலையில் காயம் ஏற்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று ஸ்கேன் எடுப்பதற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக வேலை பார்த்த டாக்டர் ரமேஷ் பரிந்துரைக்க வேண்டுமாம்.

இதனால் ஜோதிராஜன், டாக்டர் ரமேசை அணுகினார். டாக்டர் ரமேஷ், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஸ்கேன் பார்ப்பதற்கு பரிந்துரைக்க ரூ.300 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ஜோதிராஜன், இதுகுறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதைதொடர்ந்து போலீசாரின் ஆலோசனைப்படி ஜோதிராஜன், ரமேசிடம் ரூ.300-ஐ கொடுக்க சென்றார். ராஜபாளையம் சிவகாமிபுரத்தில் உள்ள தனது மருத்துவமனையில் இருந்த டாக்டர் ரமேசிடம், ஜோதிராஜன் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் சுற்றிவளைத்து ரமேசை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.சம்பத்குமார், லஞ்சம் பெற்ற அரசு டாக்டர் ரமேசுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Tags:    

Similar News