செய்திகள்

1 லட்சம் மீனவ பெண்களுக்கு ரூ.62 கோடி உதவி தொகை- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-10-31 13:04 IST   |   Update On 2018-10-31 13:04:00 IST
10 மாவட்டங்களை சேர்ந்த 1.38 லட்சம் மீனவ பெண்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.62.20 கோடியை அமைச்சர் ஜெயக்குமார் வழங்குவதாக அறிவித்தார். #Minister #Jayakumar
சென்னை:

தமிழக அரசின் சேமிப்பு மற்றும் நிவாரணத்திட்டத்தில் மீனவ மகளிர் ஒருவர் தனது பங்குத் தொகையாக மொத்தம் ரூ.1500/- செலுத்துவர். பயனாளிகள் செலுத்தும் பங்குத் தொகையுடன் அரசு பங்குத் தொகையாக ரூ.3000/- சேர்த்து மீன்பிடி குறைவு காலங்களில் நிவாரணத்தொகையாக மொத்தம் ரூ.4500/- பயனாளிகளுக்கு ஆண்டுதோறும் அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பங்குத்தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது.

2018-19ம் ஆண்டிற்கான சேமிப்பு மற்றும் நிவாரணத்திட்டத்தின் கீழ் 1.99 லட்சம் மீனவ மகளிர் பயன்பெறும் வகையில் அவர்களின் பங்குத் தொகையுடன் மாநில அரசு பங்குத் தொகையாக ரூ.59.65 கோடி அரசு விடுவித்துள்ளது.

மீன்பிடி குறைவு கால நிவாரணம் மற்றும் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள் முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடிய இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக 10 மாவட்டங்களை சேர்ந்த 1.38 லட்சம் கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகையாக தலா ரூ.4500 வீதம் மொத்தம் ரூ.62.20 கோடி வழங்கப்படவுள்ளது.

இத்திட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி முதல் மார்ச் வரை முடியவுள்ள காலத்திலும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இரு மாவட்டங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரை முடியவுள்ள காலத்தில் செயல்படுத்தப்படும்.

இதுதவிர, மேற்படி காலத்திற்கு கடல் மீனவ குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் சிறப்பு நிவாரணத்தொகையாக ஆண்டுதோறும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.



முதற்கட்டமாக திருவள்ளூர் முதல் ராமநாதபுரம் வரையான 10 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 1.06 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.53.30 கோடி சிறப்பு உதவி தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டங்களின் நிவாரணத் தொகை வழங்குவதை தொடங்கி வைக்கும் முகமாக மீன்வளத்துறை மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் 25 மீனவ மக்களுக்கு தமிழ்நாடு மீனவ மகளிருக்கு சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் மீனவ மகளிர் ஒருவருக்கு ரூ.4,500 வீதம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக அனுப்பிவிடும் வகையிலான ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, மீன்துறை இயக்குநர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். #Minister #Jayakumar
Tags:    

Similar News