செய்திகள்

அரியலூர் அருகே பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டம்

Published On 2018-10-28 16:53 GMT   |   Update On 2018-10-28 16:53 GMT
அரியலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மண்டை ஓடு படத்துடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மணக்குடையான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சோழன்பட்டி பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை அருகிலுள்ள தனியார் சிமெண்டு நிறுவனம் ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருகிறது.

இதனை கண்டித்து சோழன்பட்டி, தாமரைப்பூண்டி, ஆதனக்குறிச்சி, மணக்குடையான் பொதுமக்கள் மண்டை ஓடு படத்துடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர் அருள்மொழிவர்மன் தலைமை தாங்கினார். இதில் மணக்குடையான் ஊராட்சி தாமரைப்பூண்டி-சோழன்பட்டி சாலையை பஞ்சாயத்து தீர்மானத்தை மீறி ஆக்கிரமிக்காதே, சுரங்கத்தில் வெடிவைத்து கர்ப்பிணி சிசுவை அழிக்காதே, சோழன்பட்டிக்கு அருகில் மணல்மேடு அமைத்து ஊர் முழுவதும் புழுதியை கிளப்பி நுரையீரல் தொற்றை ஏற்படுத்தாதே, சுரங்கத்தை சுற்றி 33 சதவீதம் பசுமை பகுதி ஏற்படுத்து என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதில் மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முகசுந்தரம், வைத்திலிங்கம், நீலமேகம், கணேசன், கலியபெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி பாலசிங்கம், மதியழகன், நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News