செய்திகள்

வழிபாதை விவகாரம்- திருச்சி வணிக வளாக காவலாளி மீது தாக்குதல்

Published On 2018-10-24 17:05 GMT   |   Update On 2018-10-24 17:05 GMT
வழிபாதை விவகாரத்தில் திருச்சி வணிக வளாக காவலாளி மீது தாக்குதல் நடத்திய பெண்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
திருச்சி:

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் தனியார் அடுக்கு மாடி வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் பின்புறம் பொது மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வணிக வளாகத்தின் வழியாக தான் அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்ல வேண்டும். இதற்கிடையே வணிக வளாகத்தினர் தங்கள் இடத்தின் வழியாக யாரும் செல்லக்கூடாது என கூறியுள்ளனர். இது தொடர்பாக குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும் , வணிக வளாக உரிமையாளருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

சம்பவத்தன்று வணிக வளாகத்தினர் அப்பகுதியில் இரும்பு கேட் அமைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பை சேர்ந்தவர்கள்,  வணிக வளாகத்திற்கு நள்ளிரவில் திரண்டு சென்றனர். திடீரென அங்கு பணியில் இருந்த காவலாளி மண்ணச்சநல்லூர் கூத்தூர் அருகே பண்ணமங்கலத்தை சேர்ந்த கந்தசாமியிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது காவலாளி வணிக வளாகத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள், காவலாளியின்  செல்போனை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவில் கரூர் பைபாஸ் ரோடு அண்ணாமலை நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் வணிக வளாகத்தின் காவலாளி கந்தசாமி , தன்னை குடியிருப்பு வாசிகள் ராணி, மாலா ஆகியோர்களின் தூண்டுதலின் பேரில் அடையாளம் தெரியாத 4 பேர் தாக்கியதாக உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இது குறித்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் , 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News