செய்திகள்

புதிய தலைமை செயலகம் கட்டியதில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

Published On 2018-10-24 10:36 GMT   |   Update On 2018-10-24 10:36 GMT
திமுக ஆட்சியின்போது புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணையின்போது தமிழக அரசு தெரிவித்தது. #TNNewSecretariat #MadrasHC
சென்னை:

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் கட்டியதில், ஊழல் நடந்துள்ளதாக கூறி, அதுகுறித்து விசாரிக்க நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது.



இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், விசாரணை கமி‌ஷன் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். விசாரணை கமி‌ஷன் என்பதே கண் துடைப்பு நாடகம் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, நீதிபதி ஆர்.ரெகுபதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிடலாம் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மு.க.ஸ்டாலின் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாண சுந்தரம் ஆகியோர், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் அட்வகெட் ஜெனரல் சத்தியநாராயணன் ஆஜராகி, “புதிய தலைமை செயலக கட்டிட ஊழல் குறித்து போலீஸ் சுப்பிரண்டு ஒருவர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் பல நூறுகோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாகவும். இதன் மூலம் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்”.

வழக்கிற்கு அரசு தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தர நீதிபதிகள் விசாரணையை வருகிற நவம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை தனி நீதிபதி உத்தரவுக்கு பிறப்பித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். #TNNewSecretariat #MadrasHC

Tags:    

Similar News