செய்திகள்

தேனி அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது

Published On 2018-10-20 19:57 GMT   |   Update On 2018-10-20 19:57 GMT
தேனி அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:

தேனியை அடுத்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பையுடன் நின்ற 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவை கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ர்ந்த குமரேசன் (வயது 38), பழனிகுமார் (21), வசந்தகுமார் (30) பால்ராஜ் (36) என்பதும், கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது.

4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

போலீசார் விசாரணையில், கைது செய்யப்பட்ட குமரேசன், திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு, கோவையை சேர்ந்த சுந்தரம் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆகினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக 2 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக குமரேசனிடம், சுந்தரம் கொடுத்துள்ளார். குமரேசன் இந்த கள்ள நோட்டுகளை எப்படி மாற்றுவது என்பது குறித்து ஊருக்கு வந்து தனது நண்பர்களான வசந்தகுமார், பழனிகுமார், பால்ராஜ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதன்படி முதற்கட்டமாக அவர், நண்பர்கள் 3 பேரிமும் தலா ரூ.20 ஆயிரம் கொடுத்து கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார். மீதமுள்ள பணத்தை மாற்றுவது குறித்து பேசிக்கொண்டிருந்தபோதுதான் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர்.

அவர்கள் யார், யாரிடம் பணத்தை புழக்கத்தில் விட்டனர்? இவர்களுக்கும், சர்வதேச கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News