செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கள்ள நோட்டு கும்பல் கைது

Published On 2018-10-20 09:38 GMT   |   Update On 2018-10-20 09:38 GMT
ஆண்டிப்பட்டி அருகே கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் இதற்கு மூளையாக இருப்பது யார்? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கள்ள நோட்டு கும்பல் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது ராஜதானி பகுதியில் 4 பேர் சந்தேகப்படும்படி திரிந்தனர். அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த சட்டைப் பைகளில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உஷாரான போலீசார் 4 பேரையும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ராஜதானி அருகே உள்ள வீரசின்னம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் (வயது 21), வசந்தகுமார் (31), ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பாலு (31), திருப்பூர் புழுவபட்டியைச் சேர்ந்த குமரேசன் என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ரூ.1.44 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. எனினும் கள்ள நோட்டுகளை எங்கிருந்து வாங்கி வந்தனர்? இதனை அச்சடித்தது யார்? இதற்கு மூளையாக இருப்பது யார்? என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News