செய்திகள்

குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது

Published On 2018-10-19 22:52 GMT   |   Update On 2018-10-19 22:52 GMT
வாளி தண்ணீரில் அமுக்கி குழந்தையை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த அந்த பெண்ணின் தாய் மற்றும் காதலன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை கிண்டி கன்னிகாபுரத்தில் சாலையோரம் உள்ள குப்பை தொட்டியில் கடந்த மாதம் 17-ந் தேதி பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது. இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் வீசியது யார்? என விசாரணை நடத்திவந்தனர்.

போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த வசந்தி(வயது 24) என்பவர் தனது குழந்தையையே கொன்று குப்பை தொட்டியில் வீசியது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் வசந்தியை கைது செய்தனர். அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய தாய் விஜயா(55) மற்றும் போரூரை சேர்ந்த காதலன் ஜெபராஜ்(26) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையை கொன்றது குறித்து போலீசாரிடம் வசந்தி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது எனக்கும், ஜெபராஜூக்கும் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கிப் பழகியதில் கர்ப்பம் அடைந்தேன். இதனை வீட்டுக்கு தெரியாமல் மறைத்தேன். 7 மாதத்துக்கு பின்னர் நான் கர்ப்பமாக இருப்பது எனது வீட்டுக்கு தெரிந்தது.

இதனை எனது தாய் விஜயா கண்டித்தார். திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றால் அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள்? என்று கூறி, இதனை வெளியில் தெரியாமல் மறைக்க முடிவு செய்தார். அதன்பிறகு என்னை வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கடந்த மாதம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதை அறிந்தால் உறவினர்கள் கிண்டல் செய்வார்கள் என்று நாங்கள் கருதினோம். எனவே குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தோம். இதுபற்றி ஜெபராஜூக்கு தெரிவித்ததும் அவரும் ஒப்புக்கொண்டார். கடந்த 16-ந் தேதி குழந்தையை வீட்டில் உள்ள வாளியில் தண்ணீருக்குள் அமுக்கி கொன்றோம். போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் வீசினோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News