செய்திகள்
கரடி தாக்கியதில் காயம் அடைந்த தொழிலாளி பாலகிருஷ்ணன்.

வால்பாறையில் தொழிலாளியை கரடி தாக்கியது - ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2018-10-19 05:41 GMT   |   Update On 2018-10-19 05:41 GMT
வால்பாறையில் கரடி தாக்கி தொழிலாளி காயம் அடைந்த சம்பவம் தொழிலாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை புதுக்காடு எஸ்டேட் மலை 19-வது நம்பர் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் பாலகிருஷ்ணன் (61). இவர் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்து கொண்டு இருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து 2 கரடிகள் வந்தது. இதனை பார்த்ததும் பாலகிருஷ்ணன் தப்பி ஓடினார். அவரை ஒரு கரடி விரட்டி சென்றது. பின்னர் அவரது இடது தோல் பட்டையில் கரடி பலமாக தாக்கியது.

இதனால் பாலகிருஷ்ணன் அலறினார். இந்த சத்தம் கேட்டு அருகில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அவர்கள் சத்தம் போடவே பாலகிருஷ்ணனை தாக்கிய கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டது.

கரடி தாக்கியதில் காயம் அடைந்த பாலகிருஷ்ணனுக்கு முருகாளி எஸ்டேட் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் மானம்பள்ளி வன சரக அலுவலர்கள் விரைந்து வந்து கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

வால்பாறை பகுதியில் அடிக்கடி தொழிலாளர்களை கரடி தாக்கி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News