செய்திகள்

சுரங்கப்பாதை கேட்டு பள்ளி முன்பு போராட்டம்- இந்திய மாணவர் சங்கத்தினர் உள்பட 9 பேர் மீது வழக்கு

Published On 2018-10-17 07:13 GMT   |   Update On 2018-10-17 07:13 GMT
கோவை அருகே சுரங்கப்பாதை கேட்டு பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:

கோவை இருகூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்த பள்ளி ஊருக்கு தெற்கே ரெயில்வே பாதையை தாண்டி அமைந்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வர தினமும் ரெயில்பாதையை கடந்து வர வேண்டி உள்ளது. எனவே ரெயில்பாதையை கடந்து செல்ல சுரங்கபாதை அமைக்க வேண்டும் என பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

நேற்று மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.

இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி சிங்காநல்லூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன், தினேஷ், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாரியப்பன், ரவிந்திரன், பாலகிருஷ்ணன், குருசாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின், பிரபாகரன், காவ்யா மற்றும் சிலர் சட்டவிரோதமாக கூடி, மாணவ, மாணவிகளை திரட்டி பள்ளி கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அதன்பேரில் கோகுல் கிருஷ்ணன் உள்பட 9 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், மாணவர்களை தடுத்தல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News