செய்திகள்

குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவுகள் கொட்டுவதை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

Published On 2018-10-12 17:13 GMT   |   Update On 2018-10-12 17:13 GMT
ஓசூரில் குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜர் நகர் அருகே உள்ள துளசியம்மா நகரில், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றி வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், துளசியம்மா நகர் பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

மேலும் அதற்கு தீ வைப்பதால், அதிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கலந்த புகையால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினர்.

இதனால், ஆத்திரம் அடைந்த துளசியம்மா நகர் பொதுமக்கள், நேற்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News