செய்திகள்
புதுக்கோட்டையில் வீட்டுமனை மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது
வீட்டுமனை மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் தஞ்சை மாப்பிள்ளை நாயக்கர் பட்டியைச் சேர்ந்தவர் தனசாமி (வயது 67). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்புதுக்கோட்டை பாலன்நகர் பகுதியை சேர்ந்த தனபாக்கியம் மற்றும் 11- க்கும் மேற்பட்ட நபர்களிடம் வீட்டு மனை வழங்குவதாக கூறி, ரூ. 11 லட்சத்து 75 ஆயிரம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பணம் கட்டியவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் பணம் திருப்பித்தராமலும், வீட்டு மனை வழங்காமலும் தனசாமி காலதாமதம் செய்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனபாக்கியம் தலைமையில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ் பெக்டர் லட்சுமியிடம் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் பிச்சை ஆகியோர் தனசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தனசாமியை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.