செய்திகள்
கவர்னர் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் குப்பை அள்ளும் வாகனங்களை வழங்கிய காட்சி.

தூத்துக்குடியில் பஸ் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட கவர்னர்

Published On 2018-10-12 05:37 GMT   |   Update On 2018-10-12 05:37 GMT
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக தூத்துக்குடி வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் பழைய பஸ் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். #TNGovernor #Banwarilalpurohit
தூத்துக்குடி:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் சென்று மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட திட்ட‌ப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக கவர்னர் ஆய்வு செய்வதை தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. கவர்னர் வரும்பாதையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும் கவர்னர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தாமிரபரணி புஷ்கர விழாவை தொடங்கி வைப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் இரவு ரெயில் மூலம் தென்காசிக்கு வந்தார். பின்பு அவர் நேற்று பாபநாசம், நெல்லையில் நடைபெற்ற தாமிரபரணி புஷ்கர விழாவை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அவர் நேற்றிரவு நெல்லை வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இதை தொடர்ந்து இன்று காலை அவர் கார் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றார். தொடர்ந்து அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அவர் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்.

பின்னர் தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகள் அகற்றுவதற்காக 18 வாகனங்களை வழங்கினார். பின்பு அவர் அங்குள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை பார்வையிட்டார்.

பின்பு மாணவ- மாணவிகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதமாக பொதுமக்களுக்கு துணிப்பைகளை அவர் வழங்கினார். இதன்பிறகு கவர்னர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு பஸ் நிலையத்தை சுத்தம் செய்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிராம்பா, கமிசனர் ஆல்பின் ஜான் வர்க்கீஸ் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மதியம் அவர் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மாலையில் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.  #TNGovernor #Banwarilalpurohit
Tags:    

Similar News