செய்திகள்

நீலகிரியில் 233 அபாயகரமான இடங்கள் - முதன்மை செயலாளர் தகவல்

Published On 2018-10-08 13:30 GMT   |   Update On 2018-10-08 13:30 GMT
வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமாக உள்ள 233 இடங்களின் வரைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். அரசு முதன்மை செயலாளர் நிர்வாக இயக்குநர் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரகாந்த் பி.காம்ளே தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் சந்திரகாந்த் பி.காம்ளே கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பொழிகின்றது. வடகிழக்கு பருவமழையின்போது நிலச்சரிவு, மரம் விழுதல், வெள்ள அபாயம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. இவற்றை தவிர்க்கும் பொருட்டு அண்டை மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு நாட்களுக்கு வருகை புரிவதை தவிர்க்க வேண்டும்.

உள்ளுர் மக்கள் இரண்டு நாட்களுக்கு வீடுகளிலும் பாதுகாப்பான இடங்களிலும் இருக்குமாறு தெரிவித்தார்.

மேலும் 233 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டு, அதன் வரைபடங்கள் வைக்கப்பட்டுள்ளது. அனைத்துத்துறை அலுவலர்களுடன் கூடிய 35 மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

இதுவரையில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. மழையினால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள், மணல் மூட்டைகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் போன்றவை தயாராக உள்ளது. மின்வாரியத்துறை தனி குழு அமைத்து அதன் மூலம் பணி மேற்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு பருவ மழை குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சந்திரகாந்த் பி.காம்ளே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்கு பருவழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் தீயணைப்பு நிலையம் சென்று, வடகிழக்கு பருவழையால் ஏற்படும் வெள்ளத்திலிருந்து பொதுமக்களை மீட்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு, அதன் செயல் விளக்கத்தினையும் பார்வையிட்டார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News