செய்திகள்

அண்ணனை அடித்து கொன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2018-10-04 17:25 GMT   |   Update On 2018-10-04 17:25 GMT
அண்ணனை அடித்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவனூர் காலனி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன்கள் முருகன்(வயது 38), சங்கர் (32). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் முருகன் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், சங்கர் மனைவியின் தம்பி சுரேசின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பழுது ஏற்பட்டது. இதனை சரி செய்து தருவதாக சுரேஷிடம், முருகன் கூறியுள்ளார். இதில் முருகன், சங்கருக்கு இடையே கடந்த ஆண்டு வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சங்கர், முருகனின் நெற்றி பொட்டில் கையால் அடித்துள்ளார். இதையடுத்து முருகன் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ரோட்டில் மயங்கி விழுந்து முருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து முருகன் மனைவி பொன்னரசி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் சங்கருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இதையடுத்து சங்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News