செய்திகள்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு குடிநீர் வாரிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

Published On 2018-10-04 14:41 IST   |   Update On 2018-10-04 14:41:00 IST
வண்ணாரப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் குடிநீர் வாரிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:

வண்ணாரப்பேட்டையில் காத்பாடா தெரு, பென்சிலர் லைன், லெபர் லைன் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று தங்க சாலை அருகே உள்ள குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் குடிநீரில் கழிவு நீர் கலந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு வந்து சமாதான பேச்சு நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். அதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

விரைவில் குடிநீர் சுத்தமாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News