செய்திகள்

வளைவுகளில் விபத்தை தடுக்க கிழக்குகடற்கரை சாலையில் நவீன தடுப்பு ரோலர்

Published On 2018-10-03 06:25 GMT   |   Update On 2018-10-03 06:25 GMT
வளைவுகளில் விபத்தை தடுக்க கிழக்குகடற்கரை சாலையில் 1000-க்கும் மேற்பட்ட நைலான் ரோலர்களை கொண்டு சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. #accident #Roadblocking

மாமல்லபுரம்:

சென்னை-பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து மத்திய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்தனர். இதில் தமிழ் நாட்டில் வாகனங்கள் அதிவேகமாக செல்லும் பகுதியாகவும், அதிக நெடுவளைவுகள் கொண்ட ஆபத்தான பகுதியாகவும் கல்பாக்கம் அடுத்த கடம்பாக்கம், இடைக் கழிகாடு, பனையூர்குப்பம், மரக்காணம் ஆகிய பகுதிகள் இருப்பதை கண்டறிந்ததனர்.

மேலும் இரவு நேர நெடுந்தூர வாகன ஓட்டிகளிடம் கருத்துக்கள் கேட்டபோது, “இரவு நேரத்தில் வேகமாக வரும்போது திடீர் என்று நெடுவளைவை பார்த்ததும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகிறது” என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கடம்பாக்கம்-மரக்காணம் இடையே பனையூர் குப்பம் அருகே உள்ள 300 மீட்டர் நெடுவளைவு ஒன்றில் சீனா நாட்டில் சாலை விபத்தை தடுக்க பயன்படுத்தப்படும் நைலான் சேப்டி ரோலர் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி நவீன வளைவு அமைக்கப்பட்டுள்ளது.


இதில் இரவு நேரத்தில் ஒளிரும் தன்மையுடன் 1000-க்கும் மேற்பட்ட நைலான் ரோலர்களை கொண்டு சாலை தடுப்பு அமைத்துள்ளனர்.

இந்த தடுப்புகள் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வரும் வாகனங்கள் மோதினால் விபத்து மற்றும் சேதமின்றி பாதுகாப்பாக திருப்பி விடுகிறது.

தற்போது கிழக்கு கடற் கரை சாலையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் இந்த தொழில் நுட்பத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த ரோலர்களை பயன் படுத்தினால் சாலைகளும் அழகாக இருக்கும் விபத்துக்களும் குறையும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#accident #Roadblocking

Tags:    

Similar News