செய்திகள்

விபத்தில் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் இருக்கும் சிறுவனுக்கு உதவித்தொகைக்கான ஆணை

Published On 2018-10-02 16:34 GMT   |   Update On 2018-10-02 16:34 GMT
விபத்தில் பாதிக்கப்பட்டு சுயநினைவின்றி கோமா நிலையில் இருக்கும் சிறுவனுக்கு உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 295 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். இதை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரபாகர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பொதுமக்கள் வழங்கக்கூடிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் மனுவின் தன்மை குறித்து கள ஆய்வு மேற்கொண்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். அதே போல முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட மனுக்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேன்கனிக்கோட்டை நவுரோஜ் தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ஹரி(வயது 10) விபத்தில் பாதிக்கப்பட்டு சுய நினைவின்றி கோமா நிலையில் உள்ளான். அந்த சிறுவனின் பராமரிப்புக்காக மாதம்தோறும் ரூ.1,500 பெறுவதற்கான ஆணை மற்றும் கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து மருத்துவ செலவிற்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை ஆகியவற்றை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

ஊடேதுர்க்கம் அருகே உள்ள யு.குருபரப்பள்ளியைச் சேர்ந்த சென்னம்மா (62) என்ற மூதாட்டி நேற்று முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தார். இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து சென்னம்மாவுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். மனு கொடுத்த சில மணி நேரங்களில் உதவித்தொகைக்கான ஆணை கிடைத்த மகிழ்ச்சியில் மூதாட்டி சென்னம்மா, கலெக்டர் பிரபாகருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், உதவி ஆணையர் (ஆயம்) முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News