செய்திகள்

பாலக்கோடு அருகே லாரி மோதி கிரேன் ஆபரேட்டர் பலி

Published On 2018-09-29 17:29 GMT   |   Update On 2018-09-29 17:29 GMT
பாலக்கோடு அருகே சாலையை கடக்க முயன்ற கிரேன் ஆபரேட்டர் மீது லாரி மோதியது. இதில் தூக்கி வீசபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்துள்ள மாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முல்லைவேந்தன் (வயது30). இவர் கேரளா மாநிலத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாதம்மாள் (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வயது ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் விடுமுறைக்காக முல்லை வேந்தன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்றிரவு முல்லை வேந்தன் தனது பெற்றோரை வெளியூருக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று பாலக்கோடு சக்கரை ஆலை பஸ் நிறுத்தத்திற்கு சென்று விட்டார். 

பின்னர் அங்கிருந்து முல்லை வேந்தன் வீட்டிற்கு ஓசூர்- பாலக்கோடு சாலையில் வந்து கொண்டிருந்த போது மாதம்பட்டிக்கு சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக முல்லை வேந்தன் மீது மோதியது. இதில் தூக்கிவீசபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான முல்லைவேந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் தொடர்ந்து அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் மாவட்ட நிர்வாகம் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News