செய்திகள்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை - ஒகேனக்கலில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-09-27 03:46 GMT   |   Update On 2018-09-27 03:46 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #Hogenakkal
மேட்டூர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 18 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 26 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசல் சவாரியும் சென்றனர்.

ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 23 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 20 ஆயிரத்து 241 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலில் கூடுதலாக வரும் தண்ணீர் இன்று மாலை மேட்டூருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 2 2 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 104.59 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 104.41 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.  #Hogenakkal
Tags:    

Similar News