செய்திகள்

தீம்பார்க்கில் விமானப் பணிப்பெண் பலி- குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

Published On 2018-09-26 09:53 GMT   |   Update On 2018-09-26 09:54 GMT
தீம்பார்க்கில் விமானப் பணிப்பெண் பலியான சம்பவம் குறித்து அவரது குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 20 வயதான விமான பணிப்பெண் பூந்தமல்லியில் உள்ள பொழுதுபோக்கு மையத்திற்கு தனது நண்பர்களுடன் சென்றார்.

அப்போது ‘‘ஆக்டோபஸ்’’ என்ற விளையாட்டு சாதனத்தில் ‘ரைடு’ செல்லும்போது படுகாயம் அடைந்து உயிர் இழந்தார். இந்த சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி நடந்தது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் உயிரிழந்த விமான பணிப்பெண் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். மாநில குறைதீர் ஆணையத்தின் உறுப்பினர் கே.பாஸ்கரன், இந்த வழக்கினை விசாரித்தார். உயிரிழந்த விமான பணிப்பெண் இளம் வயது உடையவர் என்பதாலும், வருவாய் ஈட்டக் கூடியவராக இருந்ததாலும் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.65 லட்சம் வழங்க பொழுதுபோக்கு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

அவரது இறுதி சடங்கு செலவிற்கு ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரமும் வழங்கவேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளார். ஏற்கனவே ஐகோர்ட்டு மூலம் ரூ.25 லட்சம் பெறப்பட்டதால் மீதமுள்ள ரூ.40 லட்சம் நஷ்ட ஈடு தொகையினை வழக்கு உத்தரவு நகல் கிடைக்கப் பெற்ற 4 வாரதுக்குள் செலுத்த வேண்டும். அப்படி கட்டத்தவறினால் 12 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளார்.

இந்த வழக்கில் விமான பணிப்பெண் குடும்பம் சார்பாக வக்கீல் வாசுகி ராமன் ஆஜராகி வாதிட்டார். #tamilnews
Tags:    

Similar News