செய்திகள்

லாரி வாடகை உயர்ந்த போதிலும் கோயம்பேட்டில் காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை

Published On 2018-09-26 09:32 GMT   |   Update On 2018-09-26 09:32 GMT
லாரி வாடகை உயர்ந்த போதிலும் கோயம்பேட்டில் காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. #Vegetables #KoyambeduMarket

சென்னை:

டீசல் விலை அதிகரித்து வருவதால் லாரி வாடகை உயர்த்தப்பட்டது. அனைத்து சரக்கு வாகனங்களும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு நிர்ணயிக்கும் வாடகையை 25 சதவீதம் உயர்த்தி விட்டது. இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.

ஆனால் அழுகும் பொருளான காய்கறிகள் விலை மட்டும் உயரவில்லை. வழக்கத்தை விட குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒரு மாதமாக அனைத்து காய்கறிகளும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. லாரி வாடகை உயர்த்தப்பட்ட பிறகும் கூட காய்கறிகள் விலை உயரவில்லை. வியாபாரம் மந்தமாக இருப்பதால் எல்லா காய்கறிகளும் மலிவாக கிடைக்கின்றன.

இந்த நாட்களில் கடந்த ஆண்டில் 30 சதவீதம் விலை உயர்வு இருந்துள்ளது. ஆனால் தற்போது காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைவதற்கு காரணம் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெண்டைக்காய் கிலோ ரூ.15, கத்தரிக்காய் ரூ.10, பீட்ரூட் ரூ.8, நூல்கோல் ரூ.10, சவ்சவ் ரூ.10, காலிபிளவர் ரூ.15, தக்காளி ரூ.8 என அனைத்து காய்கறிகளும் விலை குறைவாக உள்ளது.

இதுகுறித்து மார்க்கெட் மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் கூறியதாவது:-

மார்க்கெட்டில் எல்லா காய்கறிகளும் விலை குறைவாகத்தான் உள்ளன. லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. ஆனாலும் இதனால் காய்கறிகள் விலையை உயர்த்த முடியவில்லை. மார்க்கெட்டுக்கு தினமும் 250 முதல் 300 லாரிகளில் காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. அழுகும் பொருளான இவற்றை சேமித்து வைக்க இயலாது. அதனால் விலை உயர்த்தப்படாமல் குறைந்த விலைக்கே விற்கப்படுகிறது.

காய்கறிகளை வாங்க வியாபாரிகள் இல்லை. வருகிறவர்களும் குறைந்த அளவில்தான் கொள்முதல் செய்கின்றனர். மக்களிடம் பணம் இல்லாததால் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. நஷ்டம் ஏற்படாமல் வியாபாரம் நடந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டோம். ஒரு மாதமாக காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #Vegetables #KoyambeduMarket

Tags:    

Similar News