செய்திகள்

காவேரிப்பாக்கம் அருகே மகனை காப்பாற்ற ஓடிய தாய் கிணற்றில் தவறி விழுந்து பலி

Published On 2018-09-24 12:18 GMT   |   Update On 2018-09-24 12:18 GMT
காவேரிப்பாக்கம் அருகே மகனை காப்பாற்றுவதற்காக ஓடி வந்த தாய் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பனப்பாக்கம்:

காவேரிப்பாக்கத்தை அடுத்த குப்பத்துமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34), விவசாயி. இவருடைய மனைவி காமாட்சி (30). இவர்களுக்கு ஹேமலா (9) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று காலை காமாட்சி விவசாய நிலத்திற்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது தனது மகன் விக்னேசையும் அழைத்து சென்றார். அங்கு ஆடு மேய்த்தபோது விக்னேஷ் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று அவனை காணவில்லை. அவனை தேடியபோது அருகில் உள்ள கிணற்றை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த காமாட்சி மகனை காப்பாற்றுவதற்காக அலறியடித்துக் கொண்டு கிணற்றை நோக்கி ஓடினார்.

கிணற்றின் அருகில் சென்றபோது திடீரென கால் தடுக்கி காமாட்சி, கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். உடனே அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிச்சென்று காமாட்சியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து காமாட்சி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சமேதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News