செய்திகள்

வாழைப்பழ வியாபாரத்தில் நஷ்டம்- வியாபாரி தற்கொலை

Published On 2018-09-24 11:02 GMT   |   Update On 2018-09-24 11:02 GMT
கோவை ஆவாரம்பாளையம் அருகே வாழைப்பழ வியாபாரத்தில் நஷ்டம் அடைந்த விரக்தியில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். தாய்-தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை:

கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள இளங்கோ நகரை சேர்ந்தவர் நாகராஜ் (45). இவரது மனைவி தேன்மொழி (42). இவர்களுக்கு ஆனந்தகுமார் (25) என்ற மகனும், சவுந்தர்யா (23) என்ற மகளும் உள்ளனர்.

சவுந்தர்யா திருமணமாகி கணவருடன் காந்தி மாநகரில் வசித்து வருகிறார். நாகராஜூம், ஆனந்தகுமாரும் தள்ளுவண்டியில் வாழை பழம் வியாபாரம் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த நாகராஜ் ,அவரது மனைவி தேன்மொழி, மகன் ஆனந்தகுமார் ஆகியோர் சாணிப்பவுடரை கரைத்து குடித்தனர். அப்போது சவுந்தர்யா தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தாய் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் சாணிப்பவுடரை குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்த குமார் பரிதாபமாக இறந்தார்.

நாகராஜ், தேன்மொழி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல் கிடைத்தும் பீளமேடு போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நாகராஜிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் வியாபாரத்துக்காக மொத்த வியாபாரிகள் சிலரிடம் கடனுக்கு பழங்களை வாங்கி உள்ளனர். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நாகராஜ், தேன்மொழி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News