செய்திகள்

எம்பி-எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தனிகோர்ட் - நீதிபதியாக சாந்தி நியமனம்

Published On 2018-09-20 10:42 GMT   |   Update On 2018-09-20 10:42 GMT
எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதியாக சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். #SpecialCourt
சென்னை:

ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகள் பொதுத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது.

ஆனால், சட்டத்தை உருவாக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியும், வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தி அதுகுறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி ஒவ்வொரு மாநில அரசுக்கும், அந்த மாநில ஐகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடிதம் அனுப்பியது. முதல் கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும் தகவலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் சிறப்பு கோர்ட்டு அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.14.89 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதை பயன்படுத்தி சிறப்பு கோர்ட்டை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, சிறப்பு கோர்ட்டை சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் திறக்க ஐகோர்ட்டு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு கோர்ட்டு அங்கு உருவாக்கப்பட்டது.

சிறப்பு கோர்ட்டின் முதல் நீதிபதியாக ஜெ.சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.கண்ணப்பன் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். இந்த புதிய கோர்ட்டு திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடந்தது.


விழாவுக்கு ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமை தாங்கி புதிய கோர்ட்டை திறந்து வைத்தார். விழாவில், ஐகோர்ட்டு, செசன்சு கோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு கோர்ட்டில் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள கிரிமினல் குற்றச்சாட்டு வழக்குகள் விசாரணை நடைபெறும்.

தமிழகத்தை பொறுத்த வரையில் 178 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 324 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சொத்துக்களை அபகரித்ததாகவும் தொடரப்பட்ட வழக்குகளை பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிர் கொண்டு வருகின்றனர். இதுதவிர தேர்தல் வழக்குகள் தனியாக உள்ளன என்று தன்னார்வ நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.  #MP #MLA #Cases #SpecialCourt
Tags:    

Similar News